ஊட்டி. டிசம். 05.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலருமான கே.ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது உரையின் போது கூறிய கருத்துக்களாவன –
மனித குலம் தோன்றிய நாளிலிருந்து வன விலங்குகளை அழிப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது. தற்போது உலகில் உள்ள உயிரினங்களில் பத்து சதவீதம் மட்டுமே வனவிலங்குகள். மனிதர்களால் தங்கள் தேவைக்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடு போன்ற வளர்ப்பு உயிரினங்கள் 70% உள்ளன. யானைகள் அவற்றின் தந்தங்களுக்காகவும் புலிகள் அவற்றின் பற்களும் எலும்புகளும் சீன மருத்துவத்திற்காகவும் பெருமளவில் கொல்லப்படுகிறது. நீண்ட நாள் வாழக்கூடிய கடல் ஆமைகளும் உலக அளவில் பேரழிவிற்கு உள்ளாகி இருக்கின்றன. மீன் இனங்களில் 90 சதவீதத்தை மனிதகுலம் ஏற்கனவே அழித்துவிட்டது. இதுபோன்று பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றை பாதுகாப்பது தான் இந்த நாளின் முக்கியத்துவம். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘ பூமியையும் மக்களையும் இணைத்தல் – கானுயிர் பாதுகாப்பில் டிஜிட்டல் பயன்பாடு’ என்பதாகும். அதாவது நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன விலங்குகளைப் பற்றி ஆய்வு செய்தல், அவற்றின் வலசம் செல்லும் திசையை சாட்டிலைட் துணையுடன் கண்டறிதல், அழிந்து வரும் நிலையில் உள்ள சில வன விலங்குகளை அவற்றின் மரபணு ஆய்வு மூலம் மீட்டெடுத்தல், என்பன போன்ற பல பாதுகாப்பு செயல்பாடுகளை டிஜிட்டல் துணை கொண்டு காக்க வேண்டும் என்பதாகும். காடுகளை அழிப்பதன் மூலம் வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் வாழிடமும் அழிக்கப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் நமது பாராளுமன்றத்தில் தகவல் அறியும் சட்டத்தின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 95 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் தொழில் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடு சபையின் தலைவர் கூறுவது போல நாம் இயற்கையை சார்ந்து உள்ளோம். தற்போது இயற்கை நம்மை சார்ந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். உலகில் அனைத்து உயிர்களும் ஒரு வலையால் பின்னப்பட்டுள்ளது. ஒரு உயிரின் அழிவு அந்த வலை அமைப்பின் வலிமையை குறைக்கிறது. இயற்கை மிகவும் ஒரு அற்புதமான விஷயமாகும். இயற்கையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். மற்ற உயிர்களையும் வாழ விட வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். பின்னர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோத்தகிரி அரிமா சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் காலநிலை மாற்றத்தை மீட்டெடுத்தல் – பசுமை நீலகிரி 2024 என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் இந்த விழாவில் துவக்கி வைக்கப்பட்டது. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
முன்னதாக பள்ளி ஆசிரரியர் ராஜ்குமார் வரவேற்றார். ஆசிரியை பீனா நன்றி கூறினார்.