கிருஷ்ணகிரி- ஜூலை-12-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள் அவர்கள் தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
தற்போது உலகத்திலேயே மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அறிவித்து, அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக மக்கள் தொகை தினம் “தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில், திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை தின உறுதிமொழியானது:
நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதிய பிறப்பு இடைவெளி முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி
அளிக்கிறேன்.குடும்ப நலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்” என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஜீவா நர்ஸிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.தர்மர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் மரு.பாரதி, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், பள்ளி மற்றும் நர்ஸிங் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.