ஊட்டி.பிப். 08.
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கான நுகர்வோர் சட்டம் , விழிப்புணர்வு பயிலரங்கு மற்றும் ஒருநாள் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பயிற்சியினை துவக்கி வைத்தார்.
கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் கிரிஜா, மாவட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் பேசும்போது நுகர்வோர் என்பவர் எந்த பொருளையும் சேவையும் வாங்கி பயன்படுத்துபவர்கள் ஆவார்கள். நாம் பொருட்கள் தரமானதாக தேர்வு செய்து வாங்க வேண்டும். விளம்பரங்கள் பலவும் பொய்யான தகவல் மூலம் மக்களை வாங்க தூண்டுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் தர முத்திரைகள் கொண்ட பொருட்கள் வாங்க வேண்டும். தரமான எண்ணெய் மூலம் தயாரித்த எண்ணெய் பதார்த்தங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு எளிமைப்படுத்தப்பட்டு விரைவான நிவாரணம் பெற உதவும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட, மாநில, தேசிய என்கிற மூன்றடுக்கு நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு, நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன.
இணைய வழியில் வாங்கும் பொருட்களை தரம் குறைந்து அறிந்து வாங்க வேண்டும். அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் புத்தி கூர்மை, உடல் மன வளர்ச்சி அதிகரிக்கிறது. ஊட்டசத்து குறைபாட்டினை போக்கும் வகையில் ரேசன் கடைகளில் விற்பனை செய்யபடும் செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் உப்பு, பாமலின் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகிறது. முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கோத்தகிரி வட்டார பகுதியை சேர்ந்த மகளிர் குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.