அரியலூர், டிச;13
அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, வைப்பூர் கிராமத்தில் உள்ள மருதையாற்று முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர்
பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து, ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அரியலூர் மாவட்டம், வைப்பூர் கிராமத்தில் உள்ள மருதையாறு கொள்ளிடம் ஆற்றுடன் இணையும் முகத்துவார பகுதியினை பார்வையிட்டு மழைநீர் வெளியேறும் வரத்து பகுதிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதுடன், மழைநீரின் அளவினை தொடர்ந்து கண்காணிப்பதுடன், ஆற்றின் கரைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், இதேபோன்று நீர்வரத்து உள்ள பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அப்புறப்படுத்தி மழைநீர் சீராக செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் மழை பொழிவின் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் அனைத்து துறைகளின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாமல் கண்காணித்திட வேண்டும் எனவும், கிராம ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்கள் உள்ளிட்டவற்றில் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட வேண்டும் எனவும், பயிர் செய்யப்பட்டுள்ள வயல்வெளிகளில் மழைநீரானது தேங்காத வண்ணம் மழைநீர் வெளியேறும் பாலங்கள், கால்வாய்களை சுத்தம் செய்திட வேண்டுமெனவும், மழைநீர் வெளியேறும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) தமிழரசன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்