நாகர்கோவில் ஆக 18
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரவியதால் கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றிலும் உள்ள ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு பொறுப்பேற்ற பின்பு மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நவம்பர் மாதம் 2-ம் கட்டமாக விடுபட்ட பெண்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சனிக்கிழமை , திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உரிமைத்தொகைக்காக விடுபட்ட பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், பெறப்படும் விண்ணப்பங்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.
இதனை உண்மையென நம்பி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பெண்கள் வருகை தந்தனர். அது போன்ற முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை என கலெக்டர் அலுவலக அதிகாரிகள், போலீசார் கூறினாலும் கூட பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொலைதூரங்களில் இருந்து வந்த பெண்கள் சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் ஆட்சியர் அலுவலகம் வந்து அலைந்து செல்வதாக வேதனையோடு கூறி சென்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது அதில்,
மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.
இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை வதந்திகளை நம்பம் வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.