கிருஷணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (32). இவருடைய கணவர் செந்தில்குமார் (48). இவர்களுக்கு பூர்ணிமா (17) மற்றும் யோகஶ்ரீ (6) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரேவதியின் கணவர் செந்தில்குமார் உடல் நலக்குறைவாக உள்ள நிலையில் இரு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வரும் நிலையில், செந்தில்குமாருக்கு உரிய சொத்து சுமார் 87 செண்ட் நிலத்தை மைத்துனர் பிரபு பறித்துக்கொண்டதாக கூறி பாரூர் மூன்று வழிச்சாலையின் நடுவே தனது 6 வயது பெண் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த பாரூர் போலீசார் பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து ரேவதியிடம் கேட்டபோது, என்னுடைய கணவருக்கு உடல்நலக்குறைவு இருப்பதை அறிந்து என்னுடைய மாமனார் மாமியார் உதவியோடு என்னுடைய கணவருக்கு சேர வேண்டிய சுமார் 87 செண்ட் நிலத்தை என்னுடைய மைத்துனர் பிரபு பெயருக்கு மாற்றி, பின்னர் பிரபு அவரது மாமனார் பெயருக்கு 99 வருடத்திற்கு குத்தகை போட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்னிடம் கையொப்பம் பெறப்படவில்லை, இருப்பினும் நான் கையொப்பம் போட்டதாக கூறுகின்றனர். இரு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, செயல் பட முடியாத நிலையில் உள்ள கணவரையும் வைத்துக்கொண்டு என்னால் வாழ முடியவில்லை. முறைகேடாக பறிக்கப்பட்ட சுமார் 87 செண்ட் நிலத்தை பெற்றுத்தர கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகிறேன் என தெரிவித்தார்.