ஊட்டி. டிச. 16
உலக மாற்று திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு உதகையில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 78 பயனாளிகளுக்கு 9 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் சர்வதேச மருந்தாக்கியல் கல்லூரியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த தின விழாவினை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 78 பயனாளிகளுக்கு 9 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.
குறிப்பாக இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, செவித்திறன் குறையுடைய மற்றும் பார்வை திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் பேசி வழங்கும் திட்டம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குகுச்சி மற்றும் பிரெய்லி கை கடிகாரம் வழங்கும் திட்டம், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.