நாகர்கோவில், ஜூலை – 30,
நாகர்கோவில் மாநகரட்சியின் நிர்வாக சீர்கேடை முறைப்படுத்த கோரியும், மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே பதவியில் பணிபுரியும் அலுவலர்களை அரசாணை விதிப்படி இடமாற்ற கோரியும், மாநகராட்சி பணிகளில் நடந்துள்ள விதிமீறல்களை உடனடியாக விசாரிக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் இதே மாநகராட்சியில் வசிப்பவர்களே, அதாவது சொந்த ஊர் காரர்கள் இவர்கள் தங்களது பதவியின் அதிகாரத்தை கொண்டும். அரசியல்வாதிகளின் தயவிலும் நாகர்கோவில் மாநகராட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இருக்கையில் பணியாற்றி வருகின்றனர். இது அரசாணைக்கு எதிரானது.
இவர்கள் மீது தற்போதைய ஆணையாளர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை இருக்கை மாற்றம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையளரால் போடப்பட்டும் ஒரு சில குறிப்பிட்ட அலுவலர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இருக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் போடாமல் இருக்கும் அலுவலர்களை கண்டறிந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
மாநகராட்சி விதிகளின்படி நாகர்கோவில் மாநகராட்சி நான்கு மண்டலங்கள் பிரித்து செயல்பட வேண்டும். ஆனால் இன்று வரை நாகர்கோவில் மாநகராட்சியில் எந்த பிரிவுகளும் ஆணையாளரால் மேற்கொள்ளப்படவில்லை.
மாநகராட்சி பொறியியல் துறையில் 2 பணி ஆய்வாளர்கள் மட்டுமே 52 வார்டுகளில் நடந்த சுமார் ரூ.300 கோடி மதிப்புக்கும் மேலான பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். ஆனால் நாகர்கோவில் மாநகராட்சி இளநிலை உதவியாளருக்கு மட்டும் நான்கு உதவியாளர்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே மேற் குறிப்பிட்டுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் அவரது 4 உதவியாளர்களை உடனே இடமாற்றம் செய்யப்பட்ட வேண்டும்.
கண்காணிப்பாளராக 6 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 1,00,000/- வரை வழங்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் உதவியாளரின் பணிகளையே செய்து வருகிறார்கள். ஒரு உதவியாளரின் சம்பளம் அதிகபட்சம் ரூ.50,000/- மட்டுமே. கண்காணிப்பாளர் திட்டமிடல் பிரிவில் உதவியாளர் வேலை செய்து வருகிறார். இதனால் மாநகராட்சிக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியால் 24/06/2024 அன்று வலைதளத்தில் போடப்பட்ட இரு ஒப்பந்த புள்ளிகளாகிய பால்பண்ணை முதல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை பாதாளச் சாக்கடை சரி செய்ய சுமார் 57 இலட்சம் மதிப்பீட்டில் இரு பணிகளுக்கு வழங்குவதற்கு ஜூனியர் இன்ஜினியர் – க்கு 20 இலட்சம் வரை தான் அதிகாரம் உள்ளது அப்படியிருக்க விடுப்பில் இருக்கும் உதவி செயற்பொறியாளர் கையொப்பம் இட வாய்ப்பில்லாத போது இவ்விறு பணிகளுக்கும் வழங்கிய அதிகாரியின் விபரத்தை பெற்று தருமாறும், மேலும் உதவி பொறியாளருக்கு உதவி செயற்பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கிய அதிகாரியின் விபரமும் கேட்டும்,
பொறியியல் துறையில் ஒப்பந்ததாரர்கள் செய்யும் பணிகளுக்கு குறிப்பாக ஒரு பணியினை எடுத்து கொண்டால் அவை ஒன்றின் பின் ஒன்றாக முடிக்கப்படுவதை தொடர்ந்து அளவீட்டு புத்தகம் எழுதப்பட வேண்டும். அளவீட்டு புத்தகத்தில் பணியின் அளவு மாநகராட்சி பொறியாளரால் சரி பார்த்த பின்னரே அடுத்த பணியை ஒப்பந்ததாரரால் முன்னெடுக்க முடியும். ஆனால் மாநகராட்சி அலுவலகத்தின் தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியம் மே மாதம் பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய ஒட்டு மொத்த பொறுப்பையும் உதவி செயற்பொறியாளர் மேற்கொண்டு வருகிறார். அவர் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை மிகக்குறைவான நாட்கள் மட்டுமே பணிக்கு வந்ததாக அறியப்படுகிறது. அப்படியிருக்க ஜீன், ஜூலை மாதங்களில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அளவீட்டு புத்தகத்தில் பதிவு செய்ததை எவ்வாறு மேல் ஒப்பம் செய்திருக்க முடியும். பணிகள் எவ்வாறு முடிவடைந்திருக்கும் என்கிற ஐயப்பாடு எங்களுக்குள் எழுந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் பணிகளுக்கான அளவீட்டு புத்தகத்தை மேற்பார்வையிட்டு தவறு செய்த அலுவலர் மீது உரிய நடடிக்கை எடுத்து மாநகராட்சி ஆணையாளரிடம் இருந்து தன்னிலை விளக்கம் பெற்று தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் , துணைத் தலைவர் ஆறுமுகம், இணைச் செயலாளர் சொக்கலிங்கம் , பொருளாளர் ரினோ திலக் , செய்தி தொடர்பாளர் நாகராஜ் , தெற்கு தொகுதி துணைச் செயலாளர் ஶ்ரீ ரங்கநாதன் , மேற்கு தொகுதி தலைவர் ஜான் , மற்றும் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.