கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி தாய் கிராமமாக கொண்டு, 9 கிராமங்களான சந்தம்பட்டி, சின்னபாம்பட்டி, ஜோதிநகர், கே.புதூர், நரால்சந்தம்பட்டி, சின்ன ஆலேரஹள்ளி, மின்டிகிரி, மாம்பட்டி, சைதாபேட்டை ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பெருமாளப்பன், பட்டாளம்மன், செல்லியம்மன், காளியம்மன், முனியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து திருவிழா கொண்டாடி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு உறவினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. சுமார் 1.5 லட்சம் மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் நிறைவு நாளான இன்று சந்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அல்லக்கயிறு போடும் நிகழ்வு நடைபெற்றது. சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்திற்காக வேண்டுதல் வைத்து, காளியம்மன் கோவில் முன்பு மஞ்சள் நீராடிவிட்டு கோவிலை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நிற்கையில், காளியம்மன் கோவில் பூசாரி அருள் வந்து ஊசியில் உள்ள நூலை அல்லப்பகுதியில் (இடுப்பு) குத்தி, தொடர்ந்து 500 நபர்களுக்கும் குத்திவிட்டுவர். பின்னர் பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு கோர்க்கப்பட்ட நூலை பிரித்து எடுப்பர். இந்த அல்லக்கயிறு நிகழ்வு செய்து முடித்தால், கடவுளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. நிறைவாக காளியம்மன கோவில் முன்பு சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கத்து கிராமத்தை சேந்த பொது மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் சாட்டையடி பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று கண்டு களித்தனர். சந்தம்பட்டி ஊர் கவுண்டர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.