நாகர்கோவில் ஜன 30
நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜசேகர் என்பவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீசில் பிடிபட்ட அன்றே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இப்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் ஜெயில், சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என பல நடவடிக்கைகள் உள்ளன. ஆனாலும் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயணம் தடவிய நோட்டை கொடுத்து கையும் களவுமாக பிடிக்கிறார்கள். அதைவைத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்கள், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
ஜாமீனில் வந்து வேலைக்கு சென்றாலும், ஒவ்வொரு முறையும் வாய்தாவிற்கு செல்ல வேண்டும். இறுதியாக நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்று சிறைக்கு போக வேண்டும்.. இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே சிக்கலில் இருந்து வெளியே வரமுடியும். இல்லாவிட்டால் சிறையில் தான் சில ஆண்டுகளை கழிக்க வேண்டியது வரும்.. அப்படித்தான் நாகர்கோவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது.
நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 56 வயதாகும் ராஜசேகர் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சி.டி. விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம், அவ்வப்போது கடையில் சோதனை நடத்தாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டு வந்தாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க கண்ணன் விரும்பவில்லை. எனவே இதுபற்றி அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தார்கள். இதற்காக ரசாயன பொடி தடவிய ரூ.50 ஆயிரத்தை கண்ணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார்கள் அதன்படி கடந்த 28-6-2013 அன்று கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜசேகரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது இன்ஸ்பெக்டர், தான் அண்ணா சிலை அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்கும்படியும் கூறியிருக்கிறார். அதன்படி கண்ணன் அங்கு சென்று ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அதை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வாங்கியிருக்கிறார். இதை அங்கு மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வந்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே போலீசில் பிடிபட்ட அன்றே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் பணிக்கு வரவில்லை
இதனிடையே இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தார்.