ஊட்டி. டிச. 31.
சமீபகாலமாக வனவிலங்குகளால் கிராம பகுதியினர் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். காடுகளின் அழிவாலும் காடுகளில் உணவு தண்ணீர் கிடைக்காததாலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும் வனவிலங்குகளான காட்டெருமை, யானை, கரடி, சிறுத்தை போன்றவை அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும், வீடுகளையும் அழித்து அட்டகாசம் செய்து வருகிறது. கோத்தகிரி பகுதிகளில் சிறுத்தை, புலிகள் ஊருக்குள் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது. இதனால் ஆடுமாடுகள் தாக்கப்படுவதால் ஊர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனை பகுதியில் கரடிகள் புகுந்து நோயாளிகளை அச்சுறுத்திய நிலையில் வீடுகள், பள்ளிகள், கோவில்கள், அங்கன்வாடிகளில் புகுந்து அங்குள்ள எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை சூறையாடி வருகிறது.
சாலையோரங்களில் கிராம பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் கரடிகள் அதில் உணவு தேடி குப்பைகளை கிளறி பரப்புவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் தன்மையும் ஏற்படுவதோடு அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்து வருகின்றனர். தொட்டணி என்னும் கிராமத்தில் ஆளில்லாத வீடுகளில் கரடிகள் புகுந்து வீட்டை சூறையாடி வருகிறது. அந்தப் பகுதி பெண்கள், சிறுவர்கள் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளிடமிருந்து இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென கிராமத்தினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.