வேலூர்_09
வேலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை முன்னிட்டு காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் பகுதி தலைவர் நவீன், தலைமையில் இன்று காலை தனபாக்கியம் கல்யாண மண்டபம் சர்க்கிள் காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக வெற்றி கழகத்தைப் (தவெக) பதிவு செய்த அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டபூர்வமாக பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியத்தேர்தலில் கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
“இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.
“திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கட்சியின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்,” என அவர் கூறினார்.
தவெக கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.