அரியலூர், ஜூலை:11
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டு, 133 மனுக்கள் ஏற்கப்பட்டும், 02 மனு தள்ளுபடி செய்யப்பட்டும், 10 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 78 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.9,67,500 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகையும், 17 பயனாளிகளுக்கு ரூ.1,54,000 மதிப்பில் திருமண உதவிதொகைகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் ஆணைகளும், 13 பயனாளிகளுக்கு நில அளவை உட்பிரிவு பட்டா மாற்றம் ஆணைகளும், 27 பயனாளிகளுக்கு நத்தம் மனை பட்டா நகல்களும், 46 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பில் இடுபொருட்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.40,068 மதிப்பில் விவசாய இடுபொருட்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.20,136 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.16,86,000 மதிப்பில் பயிர் கடனுதவிகளும், 13 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,46,61,000 மதிப்பில் கடனுதவிகளும், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1,04,832 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.1,69,120 மதிப்பில் நவீன உயர் ரக தையல் இயந்திரங்களும், சுகாதாரத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 03 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2,80,000 மதிப்பில் கடனுதவிகளும் என மொத்தம் 248 பயனாளிகளுக்கு ரூ.1,81,22,656 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளரச்சித்திட்டம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
மக்கள் தொடர்பு முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு மக்களின் குறைகளுக்கு தீர்வுக்காணப்பட்டு வருகிறது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த திட்டங்கள் தொடர்புடைய அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆனந்தவாடி கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 113 பயனாளிகள் பல்வேறு திட்டங்களில் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், 15 வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11.07.2024) முதல் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஆனந்தவாடி கிராமத்திற்குரிய முகாம்கள் 18.07.2024 அன்று இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு எளிதான முறையில் கடனுதவி பெற்று தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கூட்டுறவு கடனுதவிகள் அமைகிறது. ஆடு, மாடுகள் வாங்குவதற்கான கடனுதவிகள், பெட்டிகடைகள் வைப்பதற்கான கடனுதவிகள் உள்ளிட்ட வாழ்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்கள் துவங்குவதற்கு கடன் வழங்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இப்பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டை போல பூச்சிகள் தாக்குதல் இழப்பு ஏற்படாமல் இருக்க வேளாண்மைத்துறை சார்பில் வழங்கப்படும் நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். இதன் காரணமாக பயிர்கள் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம். எனவே அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளின் வாயிலாக தேவையான தகவல்களை அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து இம்முகாமில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த ஒரு நபருக்கு உடனடியாக காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக, இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) (பொ) சுமதி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.அஜிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.