நாகர்கோவில் ஜூலை 24
குறைந்த விலையில் நீண்ட தூரம் வசதியாகவும் விரைவாகவும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு மக்களின் பெரும்பாலான தேர்வாக ரயில்கள்தான் உள்ளன.ரயில்களில் பல வகைகள் உள்ளன இன்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் இருந்து வந்தன. ரயில்வே துறையை மேம்படுத்தவும் பயணிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக பயணிக்கும் பொருட்டும். வந்தே பாரத் என்ற புது ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் 12, 2024 ஆம் தேதி வரை மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அதிகபட்சம் 800 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களை இணைக்கும் படியாக இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி சேர் கார், எக்ஸிக்யூடிவ் சேர் கார் என்று இரண்டு விதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவாகவும் வசதியாகவும் செல்லக்கூடிய இந்த ரயில் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு மேலே இருக்கிறது. ஆனால் இதில் அமர்ந்து கொண்டே நீண்ட தூரம் செல்வது என்பது அனைத்து பயணிகளுக்கும் ஏற்றதாக இருக்காது. அதனால் இந்திய அரசு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரித்து இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.சென்னை ஐசிஎப் மற்றும் பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்ன் உள்கட்டமைப்புகள் பற்றிய படங்களை வெளியிட்டு இருந்தார். அதன்படி ஒரே சமயத்தில் 887 பயணிகள் உடன் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயணிக்க உள்ளது. ஒரு ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச், 4 ஏசி டூ டயர், கோச் 7 ஏசி 3 டயர் பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகளை கொண்டதாக இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த எடை கொண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படும் இந்த கோச்சுகள் ரயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முதலில் டெல்லி-மும்பை. டெல்லி -ஹவுரா இடையில் இயக்கப்படும் என தெரிகிறது. அதனை அடுத்து கொச்சுவேலி-பெங்களூரு, கன்னியாகுமரி-ஸ்ரீநகர் ஆகிய வழித்தடங்களுக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் வடக்கு எல்லையான ஸ்ரீநகரில் இருந்து இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது இயங்கி வரும் ஸ்ரீநகர் – கன்னியாகுமரி ரயில் தடத்தை 65 மணி நேரத்திற்கு மேல் பயணித்து கடக்கிறது. இதுவே வந்தே பாரத் ஸ்லிப்பர் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.