நாகர்கோவில் பிப் 10
நாகர்கோவில் மைய பகுதியில் இருக்கும் வலம்புரிவிளை உரங்கிடங்கை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பீச் ரோடு சந்திப்பில் வலம்புரிவிளை உரங்கிடங்கு உள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள கழிவு குப்பைகள் எல்லாம் இங்கே கொட்டப்படுவதால் எப்போதும் வலம்புரிவிளயை சுற்றியுள்ள பகுதிகளில் தூர் நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது. இதனால் அப் பகுதியை சுற்றியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூச்சு சுவாச கோளாறு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பலரும் இருப்பிடத்தையே காலி செய்கிற சூழல் உள்ளது.
இந்த உரக்கிடங்கை அப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என்று 40 வருடங்களாக கோரிக்கை வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இது வரையிலும் உரக்கிடங்கை மாற்றுவதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. வலம்புரிவிளை உரங்கிடங்கை சுற்றியுள்ள வீடுகளிலும், வியாபார கடைகளிலும் குப்பை கூளங்களின் மாசு படிவதால் மக்கள் அப்பகுதியில் வசிப்பதற்கும், வியாபாரம் நடத்துவதற்கும் தயக்கம் காட்டுகிறார்கள். பேருந்துகளில் கூட அப் பகுதி வழியாக பயணிக்க முடியாத அளவிற்கு தூர் நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடிக்கடி தீப்பற்றி எரியும் சம்பவங்களும் நடைபெறுவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனடியாக உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.