நாகர்கோவில் ஏப் 8
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 133 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
“ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் 133 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளன. அதாவது 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படும். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யும் பணியாளர்கள் 12 மாத காலம் பணியினை முடித்தபின், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவார்.அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 25 முதல் 35 வயது வரை ஆகும். மேலும் விதவைகள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 25 முதல் 40 வயது வரை. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 25 முதல் 38 வயது வரை.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 20 வயது முதல் 40 வயது வரை. விதவைகள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 20 முதல் 43 வயது வரை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.