கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆவலக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தின் குடிநீர் தேவையை போக்க 2013ம் ஆண்டு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி பராமரிப்பில்லாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலை நீர்தேக்க தொட்டியின் மேற்கூறை உடைந்து தொட்டியின் உள்ளேயே விழுந்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த தொட்டியை சுத்தம் செய்தது கிடையாது. இந்த தொட்டிக்கு இன்று வரை தண்ணீர் வந்து கிராம மக்கள் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த தொட்டியினுள் பாசிகள் படிந்து சுத்தமற்று காணப்படுகிறது. இதன் காரணமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பல முறை ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலவலர்களிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டியை அமைத்துக்கொடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி அவர்களிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டியை நேரில் ஆய்வு செய்தேன். அது பயன்பாட்டில் தற்போது இல்லை. அவற்றை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளகிறேன் என தெரிவித்தார்.