மதுரை பிப்ரவரி 8,
மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது. பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்ந்த கோலத்திலும் மற்றொரு ரயில் பெட்டி அடுத்த ரயில் பெட்டி மேலே சொருகி இருப்பது போலவும் ரயில் விபத்து நடத்தி மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதனால் மேலே உள்ள மின்சார கம்பி பாதிக்கப்பட்டது போலவும் மேலும் ஒரு ரயில் பெட்டியில் இருந்து புகையும் தீயும் வருவது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலை 10.44 மணிக்கு வண்டி எண் 03456 மதுரை – தாம்பரம் சிறப்பு ரயில் கூடல் நகர் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. ரயில் என்ஜினுக்கு அருகில் இருந்த ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியும் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்திருந்தது. உடனே கோட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அதிகாரிகளும், ரயில்வே ஊழியர்களும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விபத்து பற்றிய தகவல்களை சேகரித்தார்கள். உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் பணிக்காக புறப்பட்டார்கள். மதுரை ரயில் நிலையத்தில் தளவாட சாமான்கள், அவசர கால மருந்துகள், தேவையான ஊழியர்களுடன் இருந்த என்ஜினுடன் இணைந்த விபத்து மீட்பு ரயில் விரைவாகப் புறப்பட்டு கூடல் நகர் சென்று சேர்ந்தது. ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக மீட்புப் பணி ஒத்திகை நடத்தி பயிற்சி எடுத்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ அவசர மருத்துவ குழுக்கள், தகவல் மையங்கள் ஆகியவையும் செயல்பட்டன. விபத்து செய்தி கேட்டவுடன் தேசிய பேரிடர் மீட்பு படை, நெஞ்சிலுவை சங்கம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு, ஜெயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கண்காணிப்பாளர், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர், பாரத ரயில்வே சாரண சாரணியர் இயக்கம், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோரது பதில் நடவடிக்கையும் சோதனை செய்யப்பட்டது.