கன்னியாகுமரி ஏப் 16
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வெயில் கடுமையாக உள்ளது. போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து போலீசாரை தற்காத்துக் கொள்ளவும்,காவலர்கள் உடலின் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளவும், காவலர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வை தணிக்கவும், மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு நாள்தோறும் பழச்சாறு, நீர்,மோர் உள்ளிட்டவை வழங்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரின் உத்தரவின்படி கோடை காலத்தை முன்னிட்டு வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடைகால வெயிலின் வெப்பத்தை தணிக்க மோர் மற்றும் இளநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் அருண் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, தர்பூசணி போன்ற குளிர் பானங்கள் வழங்கினார்கள். மேலும்,வெயிலின் நேரடித் தாக்கம் இல்லாமல் இருக்க காவலர்களுக்கு தொப்பி, குளிர் கண்ணாடிகள், ஹெல்மெட், ஒளிரும் ஜாக்கெட் போன்றவைகள் வழங்கபட்டது.