நாகர்கோவில் பிப் 15
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் Iமேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான காவல்துறையினர் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது
வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களை பிரீத் அனலைசர் கருவி மூலம் சுவாச பரிசோதனை செய்தபோது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை ஓட்டி வந்த
ஓட்டுநர் ஸ்ரீ அய்யப்பன் என்பவர் மது போதையில் பேருந்தை இயக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி ஓட்டுநர் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீதும் குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மேற்படி வாகன ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் “ZERO ACCIDENT” என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.