நீலகிரி. மார்ச். 14.
மத்திய அரசு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு நலத்துறை ஆதரவுடன் கோத்தகிரி நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பாக புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ராயர் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் கூறிய கருத்துக்களாவன –
புகையிலை பொருட்கள் புகைப் பவர் ஒருவரின் உடல் உறுப்புக்கள் அனைத்தையுமே பாதிக்கிறது. குறிப்பாக இதயம், மூளை, நரம்பு மண்டலம் போன்ற பகுதிகளை பாதிக்கிறது. ஒரு சிகரெட் புகையில் 4000 வேதிப்பொருள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் உள்ள தார் மூச்சு குழாய்களில் பக்கவாட்டில் ஒட்டிக்கொண்டு நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் என்ற பொருள் மூளையில் மகிழ்ச்சிக்கு காரணமான டோபோமைன் என்ற சுரப்பியை அதிக அளவில் சுரக்க செய்து புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைப்படுத்துகிறது. புற்றுநோய், சர்க்கரை, கேங்கிரின் எனப்படும் தோல் அழுகல் போன்ற பல நோய்களை வாரி வழங்குகிறது. குடிப்பழக்கம் சாதாரணமாக குடிப்பவர்களில் ஐந்தில் இரண்டு பேரை குடிநோயாளியாக மாற்றுகிறது. மதுவில் உள்ள எத்தனால் என்ற திரவம் ஒருவரை குடி நோயாளி ஆக்குகிறது. ஒரு குடி நோயாளி தன்னைச் சுற்றியுள்ள 200 பேரை மனநோயாளியாக மாற்றுவார் என மருத்துவ அறிவியல் கூறுகிறது. உலகில் ஒருவர் நரகத்தை பார்க்க வேண்டுமானால் ஒரு குடி நோயாளியின் வீட்டிற்கு போனால் போதும். உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில்’ விதியே, உன் பெயர் என்ன மதுவா’ என்று கேட்கிறார். இன்று விதி தான் மது பாட்டில்கள் வழியாக மக்களை விளக்கை நோக்கி வந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல மக்களை தன் பக்கம் ஈர்த்து வாழ்க்கையை நாசப்படுத்துகிறது. தற்போது பரவலாக பேசப்படும் போதைப் பொருட்கள் இளைஞர்களை சீரழிப்பதில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது. போதைப் பொருட்கள் அதை பயன்படுத்துபவரின் மூளை நரம்பு மண்டலம் போன்ற பகுதிகளை சிக்கலாகி அவரை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி விரைவில் சவக்குழிக்கே செல்ல வழி வகுக்கிறது. அனைத்து வகையான மகிழ்ச்சி தரும் செயல்பாடான மூளையில் சுரக்கும் டோப்போமேன் அளவோடு இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி தரும். அளவு மீறினால் வாழ்க்கை நரகம் தான். புகைப்பவர் தான் மட்டுமல்ல தன் அருகில் உள்ள புகைக்காதவர்களையும் புற்று நோய்க்கு உள்ளாக்குகிறார். மேலும் மதுப்பழக்கம் குடிப்பவரை மட்டுமல்ல அவருடைய சந்ததிகளையும் குடி நோயாளியாக மாற்றுகிறது. மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்களை கூறினார். சமூக சேவகர் பால் ஜோசப் மாணவர்களுக்கு புகைப்பதன் தீமைகளை குறித்த குறும்படங்களை காட்டினார். கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகேந்திரன், பள்ளி முதுகலை ஆசிரியர் சரவணக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கோத்தகிரி வட்டார நேரு யுவகேந்திரா அமைப்பின் செயலாளர் சத்தியசீலன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.