மதுரை டிசம்பர் 20,
மதுரை காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு
மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய அமலி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு தனது மகனை எஸ்.எஸ். காலனி போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினார். இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிந்து விட்டதாக காவல் துறை தரப்பில தெரிவிக்கப்பட்டது. அப்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உரிய வகையில் செயல்படுவதை உறுதி செய்யவும், கேமரா பதிவுகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக உள்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை இணைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், சில கேமராக்களை புதுப்பிக்கவும், பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கவும் ரூ.27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் 2 கட்டங்களாக, 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.