கன்னியாகுமரி நவ 21
கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் ‘சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அதிநவீன படகுகள் மூலம் நடைபெற்றது- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களில் 3 அதிநவீன படகுகள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை சீ விஜில் என்ற பெயரில் இரண்டு நாட்கள் கடல் வழி பாதுகாப்பு ஒத்திகை ஆய்வாளர் நவீன் தலைமையில் துவங்கியது.இந்த பாதுகாப்பு ஒத்திகையானது மாலை 6 மணி வரை நடைபெற்றது . மேலும் இன்றும் நடைப்பெறும், இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்ட மீனவ கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம், மணக்குடி, வாவுத்துறை உள்பட 48 மீனவ கிராமங்களையொட்டிய கடல் பகுதியில் அதி நவீன ரோந்து படகுகள், தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் காணப்பட்டால் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தெரிவிக்குமாறு மீனவ கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். அதேபோல் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிவிரைவு விசைப்படகுகளில் தொலைநோக்கு கருவிகள் உதவியுடன் தொலைதூர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.