மதுரையில் நடைபெற உள்ள பிட்டுத் திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி மதுரைக்கு புறப்பாடாகிறார். மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், பிட்டுத் திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பங்கேற்பது வழக்கம். மதுரையில் ஆவணி மூல திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றததுடன் தொடங்கியது.
இதில் முக்கிய திருவிழாவாக வருகிற 13-ஆம் தேதி சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுவது வழக்கம். இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வருகிற 12-ஆம் தேதி மதுரைக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு பிட்டுத் திருவிழாவில் பங்கேற்கும் அவர், வருகிற 17-ஆம் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தொடர்ந்து, 18-ஆம் தேதி மாலை பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.