நாகர்கோவில் பிப் 23
விடுமுறை என்பது மாணவர்களுக்கு எப்போதும் உற்சாகமூட்டம் செய்தியாக இருக்கும் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரி,மார்ச் 4ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம், மார்ச் 11ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாவது நாள் திருவிழா என மூன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெறும். இதன்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முஞ்சிறை அருகேவுள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடையும். 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் ஒவ்வொரு ஆண்டுமே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் பெரும்பாலான மக்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.
வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கமாகும் அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளும் வகையில் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் சபரிமலை என் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கும். மொத்தம் பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, தினசரி மாலை சந்தனகுடம் பவனி, தினசரி காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். விழாவின் பத்தாம் நாள் அன்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெறும். அன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.