இரணியல், ஏப்- 23
இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குருசுமிக்கேல் மகன் மைக்கேல் ஜெகன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது காரை தந்தை குருசுமிக்கேல் பராமரித்து வந்தார். இதனிடையே கண்ணனூர் விராலிகாட்டுவிளையை சேர்ந்த ஜேக்கப் என்பவர் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி குருசு மிக்கேலிடம் காரை இரவல் கேட்டுள்ளார். ஜேக்கப் தெரிந்தவர் என்பதாலும் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கேட்டதாலும் குருசுமிக்கேல் காரை கொடுத்து அனுப்பி உள்ளார். ஆனால் ஜேக்கப் கூறியது போல் 2 நாட்கள் கழித்து காரை கொடுக்கவில்லை. இதனால் குருசுமிக்கேல் கார் குறித்து கேட்க ஜேக்கப்பை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனிடையே கார் நாகராஜ் என்பவரிடம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மைக்கேல் ஜெகன் குவைத்தில் இருந்து நாகராஜை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பாளையம் பகுதியில் உள்ள வெங்கடேஷ், சுந்தர் ஆகியோரிடம் கார் இருப்பதாக கூறி அவர்களது செல் போன் என்னையும் நாகராஜ் கொடுத்துள்ளார். அவர்களை மைக்கேல் ஜெகன் தொடர்பு கொண்டு பேசியபோது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தால் கார் கிடைக்கும் என கூறியுள்ளனர். போலீசில் புகார் அளித்தால் கார் கிடைக்காது எனவும் மிரட்டி உள்ளனர்.
இது குறித்து மைக்கேல் ஜெகன் சகோதரர் மைக்கேல் ஜெஸின் என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காரை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.