நாகர்கோவில் ஜூன் 7
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சார்பில் போட்டியிட்ட மரிய ஜெனிபர் தன்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கூறும்போது:-
நாம் பெரிதும் எதிர்பார்த்திருந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. இந்த அரசியல் தளத்தில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுடன் சேர்ந்து பயணித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம். சமூகம் பற்றிய என் பார்வையை மாற்றிய அனுபவமும் கூட!
அரசியல் தலைமைப்பண்பின் கடினமான பகுதி என்னவெனில், மக்கள் தங்கள் தலைவர்களை எந்தெந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள், எதன் அடிப்படையில் மக்கள் ஒரு தலைவர் மீது நம்பிக்கை செலுத்துகிறார்கள் என்பது பற்றிய ஆழமான புரிதலை பெறுவதாகும்.
அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மதிப்பீடு என்பது அவர்கள் தரப்பு பார்வையில் இருந்து மிகவும் நியாயமானதே.
இந்த முடிவுகள், தேர்தல் பற்றிய அவர்களது புரிதலையும், அவர்களது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார்கள் என்ற நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் விஜய் வசந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில் என்னை ஆதரித்து அவர்களில் ஒருவராக என்னை அங்கீகரித்து அவர்களின் பிரதிநிதியாக என்னை ஏற்றுக் கொண்ட மக்கள் என் மீது பொழிந்த அளவுகடந்த அன்பும் ஆதரவும் அளப்பெரியது. அது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது.
அவர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அனுபவத்திலிருந்து மிகவும் ஆழமான மற்றும் நுணுக்கமான பெரும் புரிதலை பெற்றிருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் மக்களுடனான- மக்களுக்கான இந்த பயணம் நிச்சயம் தொடரும்.
இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து தோளோடு தோள் நின்று உழைத்த கட்சி நிர்வாகிகள், மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் தமிழர் கட்சியின் பேரெழுச்சியை நோக்கிய இந்த பயணத்தில் என்னை நம்பி இந்த வாய்ப்பினை தந்த அண்ணன் சீமான்- க்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.