நாகர்கோவில் மே 18
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகிலுள்ள பொது புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தில் கேரள வாலிபர் மூழ்கி பலியானார். நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோயில் புதுக்குடியிருப்பு பகுதியில் சுப்பையார் குளம் அமைந்துள்ளது.
இக்குளம் மிகவும் பாழடைந்து அசுத்தமாக காணப்பட்ட தற்போது தூர் வாரப்பட்டு, தூய்மை படுத்தப்பட்டுள்ளது. இக்குளத்தில் மழை பெய்து தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில் இப்பகுதி மக்கள் குளிப்பதுடன், சிறுவர்கள் நீந்தி விளையாடி வருகின்றனர். இக்குளம் ஆழமாக தூர்வாரப்பட்டதுடன், பரந்து விரிந்து காணப்படுவதால், இக்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிவிளையைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி நீந்தி குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது இக்குளம் தூர் வாரிய பின்பு நடந்த முதல் உயிர்பலி ஆகும். கடந்த சில நாட்கள் முன்பு ராமன் புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது இக்குளத்தில் நடந்த இரண்டாவது உயர் பலியாகும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த குளத்தின் படித்துறையில் 36 வயது மதிக்க தக்க கேரள வாலிபர் ஒருவர் மதுபோதையுடன் படுத்து கிடந்துள்ளார்.நேற்று காலை அவர் படுத்திருந்த இடத்தில், அவரது செல்போன் மற்றும் உடமைகள் மட்டும் இருந்துள்ளன. இதனை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து சந்தேகமடைந்து நாகர்கோவில் தீ அணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் துரை உத்தரவின் பேரில் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று லைப் ஜாக்கட் உதவியுடன், குளத்தில் குதித்து வாலிபரை தேடினர். அப்போது வாலிபர் குளிப்பதற்காக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டனர். வாலிபர் படுத்திருந்த இடத்தில் அவரது ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதன் மூலம் இறந்து போனது கேரள மாநிலம் செம்பூர் ஓட்டசேகர மங்கலம் அருகே புத்தன் வீட்டை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் மரணத்தையும் சேர்த்து இக்குளத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.