நாகர்கோவில் நவ 11
கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு டிசம்பர் மாதம் 31- ம் தேதியோடு 25 ஆண்டு காலம் முடிவடைகிறது.
2025- புத்தாண்டை ஒட்டி திருவள்ளுவர் சிலைக்கு 26 வயது தொடங்கிறது. இந்த நாளில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு விழாவினை நடத்திட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-
” உலக அளவில் திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி இரண்டாயிரம் ஜனவரி 01- ல் கன்னியாகுமரியில் 133 அடியில் சிலையை திறந்து வைத்தார்.
இந்த திருவள்ளுவர் சிலையை காண தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள், இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் இருந்தும் கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்கள்.
இந் நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் இருந்து அருகில் உள்ள விவேகானந்தர் பாறை வரைக்கும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் விதத்தில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இதற்கான பணிகள் நடந்தேறி வருவதால், சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.
இந் நிலையில் புத்தாண்டை ஒட்டி 26- வது ஆண்டு தொடங்க இருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு விழாவினை நடத்திட வேண்டும். இதற்காக கண்ணாடி கூண்டு பால பணியினை துரிதமாக நடத்தி முடித்திட வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.