மதுரை மே 27,
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
மதுரையில் தேவாரம் பாடிய மூவரில் முதல்வரான திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை விழாவையொட்டி, நாயன்மார்கள் வீதியுலா மதுரையில் நடைபெற்றது.
சமயக் குரவர்களில் ஒருவரும், மதுரை ஆதீன குரு மூலவருமான திருஞான சம்பந்தரின் குருபூஜை விழா, மதுரை ஆதீனம் சார்பில், கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞான சம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிறகு, திருஞான சம்பந்தரை தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அறுபத்து மூன்று நாயன்மார்களின் வீதியுலா நடைபெற்றது. ஆவணி மூல வீதி வழியே வலம் வந்த இந்த ஊர்வலம், மதுரை ஆதீன மடத்தை அடைந்தது. அங்கு, ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருஞான சம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து, அங்கிருந்து நாயன்மார்கள் வீதியுலா மீண்டும் தொடங்கி, கோயில் பிரகாரத்தை வலம் வந்து கோயிலை அடைந்தது.