ஆரல்வாய்மொழி ஏப் 22
கன்னியாகுமரி – புதுடெல்லி செல்லும் திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியிலிருந்து புதுடெல்லி செல்லும் திருக்குறள் விரைவு ரயில் (எண்:12641 – வாரத்தில் இரண்டு நாட்கள்) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர் வழியாக சென்னை எக்மோர் சென்று அங்கிருந்து புதுடெல்லிக்கு செல்கிறது. இந்த ரயில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மூலம் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகிறார்கள். குறிப்பாக இந்த ரயிலினை தினசரி ரயிலாக மாற்றுவதன் மூலம் பயணிகள், சுற்றுலா பயணிகள், சரக்கு பொருட்கள் கொண்டு செல்லுதல் போன்ற வற்றிற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்வதற்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும் வாய்ப்பை பெறும். மேலும் தென்மாவட்ட மக்களுக்கு மாநில தலைநகரமான சென்னை, இந்திய தலைநகரமான புதுடெல்லி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ராணுவம் மற்றும் மத்திய அரசு பணிகளில் பணியாற்றும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் டெல்லிக்கு எளிதாக செல்வதற்கு நல்ல வசதியை ஏற்படுத்தும்.
திருக்குறள் விரைவு ரயிலினை பராமரிக்க நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதால் இந்த ரயிலினை தினசரி ரயிலாக மாற்றி தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறேன்.