போகலூர், பிப்.25-
தேசிய கல்விக் கொள்கையில் மும் மொழியை தமிழகத்தில் திமுக எதிர்த்தால் படு தோல்வியை சந்தித்து ஜீரோ நிலைக்கு வந்து விடுவது உறுதி, அத்துடன் தமிழகத்தில் ஆட்சியை நீக்கம் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது, என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியில் கூறினார்.
ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு மீட்பு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஆலோசனை கேட்க வருகை தந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் குடிகளின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒரு சாதிக்கு மட்டும் அதிகமாக கொடுக்கப்படுகிறது. உள் ஒதுக்கீடு பெயரில் உள்ளடி வேலை செய்கிறார்கள். எனவே 3 சதவீத ஒதுக்கீடு குறித்து கருத்து கேட்க அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்கள் கேட்டு வருகிறேன். மாஞ்சோலையில் மக்களின் உரிமையை பறித்து அங்கு புலிகள் இருப்பதாக தவறான தகவலை கூறி வெளியேற்ற பார்க்கிறார்கள் அங்கு புலிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மாஞ்சோலை மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு செய்ய விரும்புகின்றனர்.
புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டில் 2026 தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு எதையும் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து ஜாதி கணக்கெடுப்பு போன்றவை குறித்து மாநில அரசு தலையிட முடியாது ஆனால் மத்திய அரசு மீது பழி போடுவது பித்தலாட்டம். தமிழகத்தில் ஏழை மக்களின் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என திமுக முடிவு செய்யக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி பயில்வதை இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்ட பொழுது தமிழகத்தில் திமுக மட்டும் இரு மொழி கொள்கை என்று கூறி வருவது இந்த நூற்றாண்டில் உகந்த செயல் அல்ல. ஏழை மக்களின் பிள்ளைகள் மும்மொழி கற்றுக் கொள்வதை தடை செய்ய நீங்கள் யார்? தேசிய கல்விக் கொள்கையை தடை செய்தால் தமிழகத்தில் ஆட்சியை நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் திமுக எதிர்காலத்தில் படுதோல்வியை சந்தித்து ஜீரோ நிலைக்கு வந்து விடுவது உறுதி. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் போதை ஆயில் கடத்துவதாக தகவல்கள் வருகிறது. கடத்தலை தடுக்க வேண்டும். மீனவர் நலன் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ், மாநிலத் துணைச் செயலாளர் கதிரேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் தற்போதைய முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் மலைச்செல்வம், முதுகுளத்தூர் நகர செயலாளர் அற்புதராஜ், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா தெய்வேந்திரன், பேச்சாளர் முத்துக் கூரி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன் (ராமநாதபுரம்), ராஜா (நயினார் கோயில்), முனியசாமி (திருப்புல்லாணி), பேரின்பராஜ் (கடலாடி மேற்கு), லாசர் (கடலாடி கிழக்கு) உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.