ஆரல்வாய்மொழி, பிப்.06:தாழக்குடியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் தோவாளை தாழக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதனிடையே பல பகுதிகளிலும் சில கும்பல்கள் நூதன முறையில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. கடந்த மாதம் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் சாலை ஓரமாக நின்றிருந்த சுமார் 6க்கும் மேற்பட்ட ஆடுகளை சொகுசு காரில் வந்த கும்பல் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாழக்குடி பஸ் நிறுத்தம் அருகே தாழக்குடி வடக்கு பள்ளத்தெரு பகுதியை சார்ந்த பகவதிபெருமாள் மற்றும் தாழக்குடி கீழத்தெரு பகுதியை சார்ந்த ஆழ்வார்பிள்ளை என்பவரின் ஆடுகள் படுத்து கிடந்தது. இதனைப் பார்த்த அந்த மர்ம நபர்கள் படுத்து கிடந்த ஆடுகளின் அருகே சென்றனர். இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இறங்கி இரண்டு ஆடுகளை லாவகமாக தூக்கி பின்னால் வைத்து அங்கிருந்து வேகமாக சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சாலை ஓரமாகக் கிடந்த இரண்டு ஆடுகளை பிடித்து இருசக்கர வாகனத்தில் வைத்து திருடி செல்கின்ற காட்சி வீடியோவில் வைரலாக பரவி வந்த நிலையில் காலையில் தனது ஆடுகளை காணவில்லை என்று பகவதிபெருமாள் மற்றும் ஆழ்வார்பிள்ளை தேடி வந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அந்த மர்ம நபர்கள் திருடி செல்வது தங்களுடைய ஆடுகள் தான் என தெரிய வந்ததும் இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீடியோவில் பதிவாகியுள்ள மர்ம நபர் யார் என்ற கோணத்தில் பல பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகின்றார்