பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி சாதனந்தபுரத்தில் 50 ஆண்டுகள் பழமையான விநாயர் கோவில் இருந்த இடத்தில் கோவில் இடிக்கப்பட்டநிலையில், அங்கன்வாடி கட்டிடம் கட்ட பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி சாதனந்தபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வ விநாயகர் கோவில் இருநது வந்தது. இந்தநிலையில் சாலை விரிவாக்கப்பணிக்காக கடந்த ஆண்டு கோவில் இடிக்கப்பட்டது. அப்போது சாலை பணி முடிந்ததும், கோவிலுக்கு பின்னால் கோவில் கட்டி தரப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியில் நெடுங்குன்றம் ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன் மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கோவில் இருந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக முயற்சிகளை செய்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில் கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் கோவில் கட்டுவதற்காக இடத்தையும், கோவில் சிலைகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.மேலும் பாஜக மாநில நிர்வாகிகள் துரை சண்முகமணி, மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி தங்கவேல், சுபாஷ்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கோவில் நிர்வாகிகளிடம், அங்கன்வாடி கட்டிடத்தை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் கோவில் அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். சதானந்தபுரத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் இந்த இடத்தில் கோவில் அமைப்பதற்கே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
வண்டலூர் வட்டாட்சியர் அங்கன்வாடி கட்டிட பணிகளை நிறுத்த உத்தரவிட்டும், தொடர்ச்சியாக ஊராட்சிமன்ற தலைவர் ஆட்சேபனை இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பாக பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்றத்தை நாடி அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.