நாகர்கோவில் நவ 11
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசு, அண்மையில் உயர்த்திய முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது அனைத்து மக்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதை மனதில் நிறுத்தி, தோழமை உணர்வோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.
வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம், செட்டில்மென்ட் உட்பட 20 வகையான பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதே போல் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது, பக்கத்திற்கு 15 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது பக்கத்திற்கு 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது போக நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம் ஆகியவையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எளிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவையும் சிதைத்து விடும் அபாயத்துடன் தொடர்புடையது. அதனால் மக்களை பாதிக்கும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழக அரசை, தோழமைக் கட்சி என்னும் உணர்வோடு வலியுறுத்துகிறேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உட்பட ஏராளமான சமூகநீதி திட்டங்களுக்கு பாராட்டுகள்! அதே போல் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் உட்பட பல திட்டங்களை பாராட்டுகிறோம்.
அதே நேரம் திமுக ஆட்சியில் இன்னும் சில கோரிக்கைகளும் இருக்கிறது. மாநகரப் பகுதிகளில் கடந்த ஆண்டு 100% வீட்டு வரி உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மீண்டும் 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை, விளிம்புநிலை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரை வெகுவாகப் பாதித்துள்ளது.
வீடடுவரி, சொத்துவரி, மின் கட்டண உயர்வு ஆகியவை மக்களை வேதனை அடையச் செய்கிறது. அதிலும் ஓட்டு வீடுகளுக்கான வரி 100 ரூபாயில் இருந்தால் 1000 ரூபாயாக தோராயமாக பத்து மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே போல் வறுமை, ஏழ்மை சூழலால் உரிய நேரத்தில் வீட்டு வரியைக் கட்ட தாமதமாகும் ஏழைகளுக்கு மாதம் தோறும் அரை சதவீதம் அளவுக்கு அபராதம் விதிப்பது அந்த மக்களை பெரும் பொருளாதார சுமைக்குள் தள்ளுகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி என்னும் பெயரில் வஞ்சித்து வரும் நிலையில், திமுக அரசின் இந்த செயல்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி உடன் இதைப் பொருத்தி பார்த்து, மக்கள் பேசுவது திமுக அரசின் பல மக்கள் நல திட்டங்களால் உருவான நற்பெயரை சிதைக்கும் அபாயம் இருப்பதையும் தோழமை உணர்வோடு சுட்டிக் காட்டுகிறேன்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு திமுக ஆட்சியில் பத்திரப் பதிவு, மின் கட்டணம் உட்பட பல வழிகளிலும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற்று, பழைய கட்டண முறையை அமல்படுத்த தோழமையுடன் சுட்டுகிறேன். அதே போல் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், மாதம் தோறும் மின் கட்டணத்தை அமல்படுத்தினால் மக்களுக்கு மின் கட்டணம் இன்னும் குறையும். இதன் மூலம் மின் பயனீட்டாளருக்கு, மாதம் தோறும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். அதையும் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தின் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும், மதுவை ஒழிக்க மதுவிலக்கு நோக்கி நகர்வதே காலத்தின் தேவை என்பதையும் தோழமையுடன் சுட்டிக் காட்டுகிறேன். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.