அரியலூர், நவ;08
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாகுறிச்சி, இலுப்பையூர் ஆகிய கிராமங்களிலும், குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களாகுறிச்சி கிராமத்திலும் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின் பேரில், அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில், தளவாய் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இராஜவேலு தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் அவரது கூட்டாளியும் சேர்ந்து மேற்படி சம்பவத்தில் 53 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்ததால், தனிப்படை போலீசார் செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சென்று கிருஷ்ணமூர்த்தியை(வயது – 34) கைது செய்து அவரிடம் இருந்து மேற்படி குற்ற வழக்கு தொடர்பான 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவு எதிரி கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் 2023- ஆம் ஆண்டில் 131 வழக்குகளில் ரூபாய்.76,22,110/- மதிப்புள்ள களவுபோன பொருட்களில் Rs.48,27,810/- மதிப்புள்ள (63%) நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. 2024 – ஆம் ஆண்டில், இதுவரை 97 வழக்குகளில், காணாமல் போன 63,39,280/- மதிப்புள்ள களவுபோன நகைகளில் Rs.48,50,755/- மதிப்புள்ள (70%) நகைகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்