தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசியதாவது “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலத்தில் பிரதான சாலைகள் முழுமையாக போடப்பட்டு விட்டது. இன்னும் குறுக்கு ரோடுகளில் 100 சாலைகள் போட வேண்டி உள்ளது. மழை காலம் முடிந்த பின்னர் புதிய சாலைகள் போடப்படும். பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முகாமிற்கு உதவி ஆணையர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர் இர்வின், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், கனகராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, போல்பேட்டை பகுதி செயலாளர் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.