தென்மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் அவர்கள் இருவரையும் ஒரே ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்து இதயநோய் பிரிவு, ஸ்கேன் மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனை பணியாளர் அழைத்துச் சென்றுள்ளார்
கர்ப்பிணி பெண்களை பாதுகாப்போடு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில், பள்ளமான தார் சாலை மற்றும் தாழ்வு பகுதியில் ஆபத்தான முறையில் ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து மருத்துவமனை பெண் பணியாளர் ஒருவர் முன்னே இழுத்துச் செல்ல, அதன் பின்னே நோயாளியின் உறவினர் தள்ளிக் கொண்டு சென்றனர். எங்கே ஸ்ட்ரெச்சரின் சக்கரம் முறிந்து விழுந்து விடுவோமோ என்ற உயிர் பயத்தில் கர்ப்பிணி பெண்கள் செல்கின்றனர். சுகாதாரத்துறை இதனை கவனத்தில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.