நாகர்கோவில் ஆக11
இ.எஸ்.ஐ பயனாளிகளின் சம்பள வரம்பு ரூ 30,000 உயர்த்த வேண்டும் விஜய் வசந்த் எம்.பி அமைச்சரிடம் கோரிக்கை
மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெரும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்பொழுது மாத ஊதியமாக ரூபாய் 21,000 பெரும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ சேவைகள் வழங்கப்படுகின்றன. முன்பு ரூபாய் 15,000 என்றிருந்த இந்த வரம்பு 2016 ஆம் ஆண்டு ரூபாய் 21,000 என மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் விலைவாசியை கணக்கில் கொண்டு இதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் அரசு மிக அதிகமான தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இ.எஸ்.ஐ சலுகை பெரும் தொழிலாளர்களின் மாத சம்பள வரம்பை ரூபாய் 3௦,000 என உயர்த்த வேண்டும்.
மேலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் கிடையாது என்ற அமைப்பின் ஆணையை நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை 2௦23 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதி மன்றமும் ஏற்று கொண்டது.
ஆனால் இதற்க்கு பின்னரும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. ஆகையால் அமைச்சரகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.