மதுரை நவம்பர் 25,
மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார். உடன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ வெங்கடேசன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது எனவும், தமிழக அரசு ஆய்வுக்குக் கூட அனுமதி வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியதோடு மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனவும் அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில், கருங்காலக்குடி, தும்பைப்பபட்டி, கச்சிராயன்பட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதன் தொடர்ச்சியாக கருங்காலக்குடி ஊராட்சியில் ஐமுமுகவின் மாநிலச் செயலாளர் பொறி. பக்ருதீன் அலி அகமத். பங்கேற்று கீழ்கண்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் கிராம சபையில் அங்கீகரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமையவுள்ள டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும், தொல்லியல் சின்னங்களும், பல்லுயிர்ச் சூழல்களும் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். வேதாந்தா டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எந்த அனுமதியையும் தமிழ்நாடு அரசு தரக்கூடாது. மேலும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் இயற்றிடவும், அரசின் சார்பில் மேற்படி கனிமச் சுரங்கத்தை தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை எனும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசின் ஒப்புதலுடன் 2015. 51 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனதத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.