திருவாரூர் மாவட்டத்தில் மாணவர், மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்
திரு.வி.க.அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் விடுதி மாணவர், மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவியர்களிடம் தெரிவித்ததாவது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் தங்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் கைபேசியை ஒதுக்கி வைத்துவிட்டு அதில் நேரத்தினை செலவிடாமல் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான புத்தகங்களை வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும். கைபேசி தீமையன்று இக்காலத்தில் அது மிகவும் உறுதுணையாகவே உள்ளது. உங்கள் தேடலை எளிதாக வழங்கக்கூடியதே. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் படிப்பில்லாமல் முன்னேறலாம் என்பதனை தவிர்த்து இக்கால சூழ்நிலையில் நீங்கள் முன்னேறுவதற்கு ஆயுதமாக விளங்குவது கல்வி மட்டுமே
மேலும், இளமை பருவகாலத்தில் நீங்கள் துறைவாரியாக கல்வி பயின்று வருவதை செய்முறையாக செய்து பயில வேண்டும். இந்த இளம் பருவத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சியிலேயே அடுத்த 40 வருடகாலத்திற்கான வாழ்வு உள்ளது. இதுவே உங்களுக்கு பிற்காலத்தில் வேலை வாய்ப்புத்திறனை உருவாக்கித்தரும். ஒழுக்கம் அனைவருக்கும் மிக முக்கியமானது. ஒழுக்கத்துடன் நாம் செயல்பட்டாலே நாம் எடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி பெறும். இந்நிகழ்ச்சியினை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், முதன்மை கல்வி அலுவலர் சௌந்திரராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலர் சந்திரசேகரன், திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) முனைவர்.பி.ராஜாராமன், மத்திய பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் முனைவர்.சுகன்யா, திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர்.இரா.அறிவழகன். உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.