தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழா உள்பட அனைத்து விழாக்களிலும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இந்து மக்களும் சேர்ந்து கொண்டாடுவது இந்த பள்ளிவாசலின் தனிச்சிறப்பு . மேலும் இங்கு நடைபெறும் விழாக்களில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்த நிலையில் மக்கள் குறைதிர்க்கும் முகாமில் பள்ளிவாசல் லெப்பைதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
அந்த மனுக்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடங்களில் ஒரு சில இடங்கள் பள்ளிவாசல் பெயரில் இல்லாமல் தனிநபர் பெயரில் தீர்வை உள்ளதாகவும் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடங்களுக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பெயரிலேயே பட்டா, தீர்வை வழங்க வேண்டும். மேலும் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பும் பள்ளிவாசல் பெயரிலேயே மாற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். தாங்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பள்ளிவாசல் லெப்பைதாரர்கள் மற்றும் பங்குதாரர்களில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.