நாகர்கோவில் நவ 11
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
அஞ்சல் துறையின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும், தேசிய அளவிலான Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியினை ஊக்குவிக்கவும் இந்திய அஞ்சல் துறை மகளிர் இருசக்கர பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பேரணியானது பெங்களூருவில் தொடங்கி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தபால் வட்டங்கள் வழியாக புதுச்சேரி, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, மூணாறு, மைசூரு வழியாக செல்லும். இதில் தபால் துறை இயக்குனர் மற்றும் 13 இருசக்கர வாகன ஓட்டிகள் குழுவாக பங்கேற்கின்றனர். இதற்கான அறிவிப்பினை தகவல் தொடர்பு அமைச்சகம், தபால் துறை, புது தில்லி வெளியிட்டுள்ளது.
இப்பேரணி 13.11.2024 அன்று (பிற்பகல்) கன்னியாகுமரிக்கு வந்து சேரும். கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பாரம்பரிய செண்ட மேளத்துடன் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மாணவர்களின் டாய் ஆகர் கடிதம் எழுதும் போட்டி மற்றும் மைதான அளவிலான கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மூத்த குடிமக்கள், அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் உடனான சந்திப்பும் இடம்பெற உள்ளது. பின்னர் தபால் துறை ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர். அதன் பின்னர் இந்தக் குழு கன்னியாகுமரியில் இருந்து 14.11.2024 (காலை) மூணாறு நோக்கி புறப்படும்.
நடப்பு ஆண்டிற்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியானது “எழுதுவதில் மகிழ்ச்சி: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்” (The Joy of Writing: Importance of Letters in a Digital age) என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான காலம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கையெழுத்தினால் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பெயர் மற்றும் இருப்பிட முகவரியுடன் “01.01.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றவன் / நிறைவு பெறாதவன்” என்ற வயது சான்று கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000/-, இரண்டாம் பரிசு ரூ. 10000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000/- வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000/-, இரண்டாம் பரிசு ரூ. 25000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000/- வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.