நாகர்கோவில் அக் 30
குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சா் தங்கம் தென்னரசிடம், ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சரிடம் அவா் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 3 கட்டங்களாக ரூ.253 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்றன.
அண்மையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் துறைமுகத்தில் 100 மீட்டா் தூரத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க ரூ.10 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது துறைமுகத்தில் முகப்பு தோற்றத்தில் மணல் நிரம்பியுள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்கள், துறைமுகத்துக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே துறைமுக முகப்பு பகுதியில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துறைமுகத்தை சீரமைக்கும்போது 26 டன் எடை கொண்ட கற்களை அடுக்க வேண்டும்.
கடலோர கிராமங்களில் உள்ள தூண்டில் வளைவுகளை ஆண்டுக்கு ஒருமுறை பராமரிக்க வேண்டும். இனயம், சின்னத்துறை பகுதியில் தூண்டில் வளைவுகளுடன் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும். இரவிபுத்தன்துறையில் தூண்டில் வளைவும், ஆற்றின் பக்கம் படகு அணையும் தளமும் அமைக்க வேண்டும்.
மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவுடன் படகு அணையும் தளமும் கொண்ட மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.