தக்கலை அக் 16
குமரி மாவட்டம் தக்கலையில் பைக் ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தைக்கு 31,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் அழகிய மண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் பைக் ஓட்டி வருவதைப் பார்த்த போக்குவரத்து போலீசார் அவனை நிறுத்தி சோதனை செய்து விசாரித்த போது அவனுக்கு 13 வயது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
18 வயது பூர்த்தி அடையாத சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை மீதும், சிறுவன் மீதும் பிரிவு 199 ஏ 180 129 ஆகிய மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து 31,000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து
போலீசார் எச்சரித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் அருண் கூறும் போது :-
பிள்ளையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து விதிப்படி 18 வயது நிரம்பிய பின் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (லைசன்ஸ்) பெற்ற பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.சமீப காலமாக சிறுவர்கள் மொபட், பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கு பெற்றோரும் காரணமாக உள்ளனர். மகன் அல்லது மகள் சிறு வயதில் மொபட், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதுகின்றனர். அவர்களே பைக் ஓட்ட கற்றுக் கொடுக்கின்றனர். அவர்களது ஆசையை நிறைவேற்றுவதாக நினைத்து பெற்றோர் மிகப்பெரிய தவறை செய்கின்றனர். பிள்ளைகள் வாகனம் ஓட்ட வேண்டும் என்று கூறினாலும் அதிலுள்ள பிரச்னைகளை பெற்றோர் எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து பிள்ளையின் மீதுள்ள பாசத்தால் கண்ணை மூடிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன்படி, ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. ”தங்களுக்கு ஏதும் தெரியாது; சின்ன பையன் தெரியாமல் செஞ்சுட்டான்” என கூறி தப்பித்துவிட முடியாது, லைசென்ஸ் இல்லாத சிறுவனுக்கு பைக் கொடுத்ததற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.எனவே, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், அவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தயவு செய்து இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார்.