கன்னியாகுமரி மார்ச் 24
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் வைகாசி விசாக திருவிழாவுக்கு முன்பு, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 1.5 ஏக்கர் பரப்பிலும் 25 அடி ஆழத்திலும் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம், மன்னர் காலத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கும் போது முதலில் நிரப்பப்படும் மரபு கொண்டது. ஆனால், தற்போது கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பற்றாக்குறை, கசிவு போன்ற காரணங்களால் நீர் தேங்க முடியாமல் கடலுக்குச் செல்கிறது.
தெப்பக்குளத்தில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைய, சுற்றுவட்டார பகுதிகளில் கிணறுகள் உப்பு நீராக மாறி வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தெப்பத்திருவிழா நடத்த முடியவில்லை.
இந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. பேச்சிப்பாறை அணை திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை இணைந்து முன்கூட்டியே தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.