தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். தருமபுரியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற மாணவ, மாணவிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு- தமிழகத்திற்கான செல்போன் செயலில் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டு பேசியதாவது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து புகார்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவிக்கும் வண்ணம் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களை கண்காணிக்க மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பியை மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .இப்புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார் தெரிவித்தவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகார்களை மாநில அளவிலான தொலைபேசி எண் (10581) மற்றும் அலைபேசி எண்ணிலும் (9498410581) தொடர் கொண்டு தெரிவிக்கலாம். தருமபுரி மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் வாட்ஸ்அப் எண்ணிலும் (6369028922) புகார் தெரிவிக்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் இந்த செல்போன் செயலில் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தருமபுரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்கம் மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, சிஇஓ ஜோதி சந்திரா, டிஎஸ்பி பாஸ்கரன், உதவி ஆணையாளர் நர்மதா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம்
உள்ளிட்ட தொடர்புடைய அரசுதுறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.