சுசீந்திரம் ஜன 24
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் பரசுராமரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. காலத்திற்கேற்ப வழிவழியாக வந்த மன்னர்கள்
ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பல்வகை முயற்சி எடுத்தும், அதற்கான பணி அஸ்திவாரத்தோடு நின்று போனது. அந்த பணியை மீண்டும் துவங்க வேண்டும் என்று குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆகம விதிப்படி பிரசன்னம் பார்த்து அதற்கு உண்டான நடவடிக்கைகள் முதற்கட்டமாக எடுக்கப்பட்டன. அதன்பின் மண் பரிசோதனை, மாநில வல்லுநர் குழு அனுமதி, வரைபட குழு அனுமதி, மதிப்பீடு, கட்டமைப்பு உள்ளிட்ட அனுமதிகள் பெறப்பட்டன.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு குமரிக்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு முதன்மை செயலர் உட்பட அதிகாரிகள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் அமையவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தார்.
இதில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்படும் எனவும் அதற்கான பணிகள் நெருங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ” ராஜகோபுரம் கட்டுவதற்காக கடந்த ஜன 10 ம் தேதி அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நகலுடன் இணைத்து, இதுவரை பெறப்பட்ட அனுமதிகள் உள்ளிட்ட அறிக்கைகள் சென்னை இந்து சமய அறநிலை துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் (பொறுப்பு) ஜாண்சிராணி , தேவசம் பொறியாளர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து கொடுத்தோம். உபயம் மூலம் கட்டப்படும் ராஜகோபுரம், இதற்கான தொகை முதல் தவணையாக ரூ. 5 கோடி வழங்க நான் தயாராக உள்ளேன். இது போல் முழு தொகையும் வழங்குவதற்கும் தயாராக உள்ளேன். அரசு அனுமதி இன்னும் ஓரிரு மாதத்திற்குள் பெறப்பட்டு பணிகள் துவங்க இருக்கிறது” என்றார். ராஜகோபுரம் கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வரும் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரை பொதுமக்களும் பக்தர்களும் பாராட்டி வருகின்றனர்.