கரூர், செப்.19-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கலெக்டர் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதத்தில் 80 கோடி மரங்களையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 140 கோடி மரங்களையும் நடுவதற்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனை மாநில அரசுகள் வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆயிரத்து 171 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை,வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இதர சமூக அமைப்புகளை கொண்டு 4 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளையனை மாரியம்மன் கோயில் வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, தாந்தோணி ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)சரவணன், வெள்ளியணை ஊராட்சித்தலைவர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார், வனத்துறை வனவர்கள் பெருமாள், கோபிநாத், முதல்வரின் பசுமைத்தோழன் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.