கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் பச்சிளம் பெண் குழந்தையை, பெற்ற தாயே கொன்று புதைத்ததாக எழுந்த புகாரில் புதைத்த இடத்தில் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை… பரபரப்பு..
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மெக்கானிக் பாலமுருகன் (32) இவரது மனைவி சிவசக்தி (23) இவர்களுக்கு திருமணமாகி சிவன்யா என்ற 5-வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் கர்பமான சிவசக்திக்கு கடந்த 16-தேதி பிரசவ வலி ஏற்பட்டு சின்னாளபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்று இரவு சிவசக்திக்கு சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாயும் சேயும் நலமுடம் இருந்த நிலையில், கடந்த 19 -ம் தேதி மாலை டிஸ்சார்ஜ் செய்து, வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 20-ம் தேதி அன்று குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
இதனை அடுத்து பச்சிளம் குழந்தையை வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைத்துள்ளனர். பிறந்து 4 நாட்களான பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில், ஒரே இரவில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், விசாரணை செய்த, ஜம்புதுரைக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலா மற்றும் கிராம செவிலியரிடம், சிவசக்தி முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த கிராம செவிலியர் அம்மையநாயக்கனூர் மருத்துவ அலுவலரிடம் தெரிவித்த தகவலை அடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், விசாரணையில் நடத்திய காவல் ஆய்வாளர் அமுதா, குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தையின் மர்மமான மரணத்தின் காரணம் குறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று மதியம் குழந்தையின் தாய் சிவசக்தி வீட்டின் பின்புறம் சடலத்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.
பச்சிளம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பிறந்த 4 நாட்களான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தாய் சிவசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாவதாக பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் தாய் சிவசக்தி ஆத்திரத்தில் குழந்தையை கொன்றதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது…